Saturday 24 May 2014

முள்மீது நிற்குதடி ஆவி!








என்னென்று சொல்வேனோ தோழி? – என்
    எண்ணங்கள் அங்கிங்கு அலைபாயு தேடி!
அன்றென்றன் நெஞசிலவன் வந்தான்! – காதல்
     அன்பென்னும் இன்பம் நான் அறியாது தந்தான்!

என்முன்னர் நிற்குவன் தோற்றம்! – என்றும்
    என்நெஞ்சில் அவன்வாழ ஏனிந்த மாற்றம்?
பின்னந்த நிழல்போல வந்தான்! – வந்த
    பின்னென்னை நிழலாக்கும் பித்தத்தைத் தந்தான்!

அலையாத அன்புண்டு என்னில்! – என்னை
    ஆள்கின்ற அவன்தானே எப்போதும் கண்ணில்!
நிலையாக என்னுள்ளே நின்றான்! – நித்தம்
    நிறைந்தென்னை அக்காதல் நினைவூட்டி வென்றான்!

பெண்மூடி நின்றதடி நாணம்! – நானும்
    பேசுங்கால் வாயந்தப் பொழுதெல்லாம் ஊனம்!
மண்தேடி என்கண்கள் நிற்கும்! – என்
   மன்னவனின் முகங்காணா தகங்கண்டு கற்கும்!

கண்மூடக் காண்பதவன் காட்சி! – காணாக்
   கருத்துள்ளும் என்னோடு கலப்பதவன் ஆட்சி!
வெண்மேகம் தண்நிலவை மூடும்! – அவன்
   விரைந்தென்னை அகலுங்கால் என்நெஞ்சம் வாடும்!

பார்க்காமல் செல்கின்றான் தோழி! – எங்குப்
    பார்த்தாலும் எனைச்சூழும் பாழ்காதல் ஆழி!
யார்க்காக நிற்குமடி காலம்? – என்னை
    அறியாது போவானோ அடங்காதென் ஓலம்!

எல்லாமாய் அவனாகி நின்றான்! – மெல்ல
    எனிலாகி என்னுள்ளம் எளிதாக வென்றான்!
சொல்லாமல் அவன்சொல்லு கின்றான்! – பொல்லாச்
    சோகத்தில் எனையாழ்த்தித் தான்செல்லு கின்றான்!

                                                               
நினைவோடு நிற்குதடி ஆசை! – என்
    நிலைதன்னைக் காட்டாதோ மௌனத்தின் ஓசை!
வினையென்று விதிநோகும் நெஞ்சம்! – என்
    விழிதன்னில் அவன்வாழத் தூங்காதென் மஞ்சம்!

என்நெஞ்சம் அறியானோ தோழி? – பின்னும்
    ஏனிந்த மௌனங்கள் எனைவாட்டும் வேலி?
நன்றொன்று சொல்வானென் றெண்ணம்! – அன்றேல்
     நலிவென்றன் நலம்மாய்க்க நான்வாடல் திண்ணம்!

முள்மீது நிற்குதடி ஆவி! – எள்
    முனையேனும் என்னெண்ணம் அறியானோ பாவி!
கள்மீதும் இல்லாத மயக்கம்! – காதல்
     கொண்டால்பின் அதைக்கூற ஏனிந்தத் தயக்கம்?

ஏனென்னைக் கொல்கின்ற தேக்கம்? – என்றோ
    எனைவிட்டுப் போய்விட்ட தானந்தத் தூக்கம்!
வானுக்கு மண்மீதோ கோபம்? – நெஞ்சம்
    வாடிடுதல் எப்போதோ நான்செய்த பாவம்!

என்னெண்ணம் அவனோடு பேசும் ! – ஆனால்
    என்முன்னர் அவன்நிற்க என்நாவு கூசும்!
கண்ணாலே எனைக்காணு கின்றான்! – காதல்
    கதைபேசித் தன்னுள்ளம் காட்டாது சென்றான்!

அவரின்றி நானில்லை தோழிஎன்று
    அவருக்கு நான்சொல்ல அதிலென்ன கேலி?
சுவரென்று எமைவிட்டு நீங்கும்? – அந்தச்
     சுவைக்காக என்நெஞ்சம் இப்போதே ஏங்கும்!

இனிமேலும் நானென்ன செய்வேன்? – என்
    இன்பத்தைத் துன்பத்தை எவரோடு சொல்வேன்?
கனிதேனும் கசக்கின்ற வாழ்வு! – நானும்
    கூறாமல் இருந்தால்பின் எனக்கன்றோ தாழ்வு?

கனவிற்கும் அவர்மீது காதல்! -  என்
    கண்ணோடு உறக்கத்திற் கேனிந்த மோதல்?
மனதிற்குள் அவர்வந்த போது  - எண்ண
    மலருக்கு மணமூட்டி மகிழ்வித்த தேது?

புலம்பத்தான் செய்திட்டா ரோடி? – என்னுள்
    புதிதாயோர் விதையிட்டுப் புறப்பட்டா ரேடி!
கலங்கித்தான் நின்றேனே இன்று! – இந்தக்
    கடன்தன்னை அவர்வந்து தீர்ககுந்நாள் என்று?

இல்லாத இதயத்தின் சப்தம்! – என்
    இமைமூடாக் கனவுக்கு இருளோடு யுத்தம்! 
எல்லாமும் சொல்வாயே தோழி! – என்
    எண்ணங்கள் அவருக்கு அறிவித்து வாநீ!

கண்ணில்லென் றொளிவந்து சேரும்? – என்
    காயத்தின் இனிப்பான வலியென்று தீரும்?
இன்னும்மிங் கிருக்கின்றா யோடி? – என்
    இறப்பிங்குப் பிறக்கும்முன் பதிலோடு வாடி!

கண்ணீரில் நனைகின்ற உள்ளம்! – என்
     கனவிற்கு தினம்நொந்து கருப்பாடை கொள்ளும்!
பெண்நீயென் உளம்கண்டாய் இன்று! – நீ
     போயெந்தன் உள்ளத்தை உடன்சொன்னால் நன்று!

பகல்நேரக் கனவாக ஆமோநானும்
     பார்க்கின்ற கற்பனைகள் பொடியாகிப் போமோ?
அகலாது நிற்கும்என் நெஞ்சம்! – நீங்கின்
     அவரின்றி வாழாது மரணத்தில் துஞ்சும்!


[1995  -  மாயனூர்க் காலப் பதிவிலிருந்து..........]

Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

7 comments:

  1. வணக்கம் சகோதரர்
    மிக நீண்ட அதே சமயம் உணர்வுகளைத் தாங்கிய அற்புதமான கவியைப் பார்த்ததும் மட்டற்ற மகிழ்ச்சி பிறக்கிறது. படங்கள் இரண்டும் கச்சிதமாய் கவிதை வரிகளுக்கு பொருந்துகிறது. வாருங்கள் சகோ உங்களைப் போன்ற செறிவான எழுத்துக்கு சொந்தமானவர்களைத் தான் தமிழ் உலகம் தேடுகிறது. தொடர்ந்து படைப்புகளைத் தாருங்கள். பகிர்வுக்கு நன்றி சகோதரர்.

    ReplyDelete
    Replies
    1. ஐயா,
      நான் உங்களிடம் கற்றுக் கொள்ளவும் பெற்றுக் கொள்ளவும் இன்னும் ஏராளமாய் இருக்கின்றன. அரிச்சுவடிகளை இன்னும் திருத்திக் கொடுங்கள். வாழ்த்தெனின் எனைப் படைத்த உங்களுக்கே! வசையெனின் என் அறிவின்மை நீங்க அது வழிகோலட்டும்!
      கருத்திட்டமைக்கும் நெறிப்படுத்தியமைக்கும் என்றும் நன்றிகள்!

      Delete

  2. வணக்கம்!

    கனிபோல் இனிக்கும் இனியதமிழ்ச் சந்தம்!
    இனிமேல் கவலை இலை!

    முள்மீது நிற்குதடி ஆவி - நெஞ்சைச்
    சொல்மீது விற்குதடி வெல்லத்தைத் துாவி!
    கள்மீது சூழ்கின்ற பூக்கள் - போன்று
    கண்மீது வாழ்கின்ற தண்ணமுதப் பாக்கள்!

    சந்தத்தில் நீ..தந்த பாட்டு - முச்
    சங்கத்தில் செய்திட்ட பொங்குதமிழ்க் கூட்டு!
    சொந்தத்தில் தீட்டுகிறேன் சீட்டு - உன்
    சிந்தனையில் எந்நாளும் செந்தமிழைப் பூட்டு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கமபன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  3. கரம்தந்து பாராட்டும் நெஞ்சம்- கொஞ்சு
    கவியாலே எமைத்தீட்டென் றும்மிடத்தில் கெஞ்சும்!
    வரம்வாங்கி வந்த தமிழன்னை - உம்
    வாக்கினிலே சொக்குகிறாள் வணங்குகிறேன் உம்மை!

    ReplyDelete
  4. அருமை அருமை சகோ! தொடர வாழ்த்துக்கள் ...!
    சீராளன் பதிவுகளையும் பாருங்கள். அவரும் ஒரு சிறந்த படைப்பாளி. தருவதற்காக copy பண்ணி விட்டு பார்த்தால் ஏற்கனவே அவர் இணைந்து விட்டார். எனினும் இதோ.

    http://soumiyathesam.blogspot.com/2014/04/blog-post_19.html

    ReplyDelete
  5. அன்புச் சகோதரி,
    தங்களின் மனம்திறந்த பாராட்டிற்கும் மேலும் செம்மையுற வழிநடத்துதலுக்கும் மிக்க நன்றியுடையேன்,

    ReplyDelete
  6. அவரின்றி வாழாது மரணத்தில் துஞ்சும், உண்மையான வரிகள் தங்களிடத்தில்

    ReplyDelete